டி.ஆர்.பாலு திடீர் புரமோஷன்: டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். துரைமுருகன் திமுக.வின் பொருளாளர் ஆனதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு இந்தப் பதவிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் மூலமாக திமுக.வில் டி.ஆர்.பாலுவின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
டி.ஆர்.பாலு, திமுக முன்னணித் தலைவர்களில் ஒருவர்! கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். அவர் வகித்த பொருளாளர் பதவி யாருக்கு? என்கிற விவாதம் எழுந்தபோது, அதில் டி.ஆர்.பாலு பெயரும் அடிபட்டது. டி.ஆர்.பாலு அந்தத் தருணங்களில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக உலா வந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும் சீனியரான துரைமுருகன், திமுக பொருளாளர் பதவியை கைப்பற்றினார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/IMG-20180914-WA0010-1-300x269.jpg)
டி.ஆர்.பாலு இன்று திமுக முதன்மை செயலாளராக நியமனம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளராக நியமனம்
எனவே துரைமுருகன் வகித்த முதன்மைச் செயலாளர் பதவி யாருக்கு? என்கிற கேள்வி எழுந்தது. திமுக.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக 4-வது முக்கியப் பதவியாக முதன்மைச் செயலாளர் பதவி கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் டி.ஆர்.பாலுவை திமுக முதன்மைச் செயலாளராக நியமித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 14) அறிக்கை வெளியிட்டார். இதுநாள் வரை திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவராக பெரிய முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருந்த டி.ஆர்.பாலு, இந்தப் புதிய பதவி மூலமாக கட்சியில் அதிகாரம் வாய்ந்த நபராக மாறுகிறார்.
டி.ஆர்.பாலு வாழ்த்து பெற்றார்: டி.ஆர்.பாலு இன்று திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து கூறினார்.
டி.ஆர்.பாலு, 1980-களில் சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்து பணியாற்றியவர்! பின்னாளில் சொந்த மாவட்டமான தஞ்சாவூர் அரசியலில் கவனம் செலுத்தினார். திமுக சார்பில் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர்!
டி.ஆர்.பாலு அந்தத் துறை அமைச்சராக இருந்தபோதுதான் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ராமர் பால பிரச்னையால் அது கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2001-ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை அப்போதைய அதிமுக அரசு கைது செய்தபோது, சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவேசமாக தனது காரை கொண்டு மோதி உள்ளே நுழைய முயன்றவர் டி.ஆர்.பாலு! அப்போது மத்திய அமைச்சராகவும் அவர் இருந்தார். கருணாநிதி மீதான அவரது விசுவாசத்தின் அடையாளமாக அந்த நிகழ்வை திமுக.வினர் குறிப்பிடுகின்றனர்.