Advertisment

ஆளுனர் ஆர்.என் ரவி பேச்சுக்கு டி.ஆர் பாலு கண்டனம்: 'கமலாலயத்தில் பேச வேண்டியதை ஆளுனர் மாளிகையில் இருந்து பேசுவதா?'

"தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News

Tamil News Updates

"தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் ஆளுநர் ஆர்.என்.இரவி செய்து கொண்டிருக்கிறார்.

எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம்,  திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. 

பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.

வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கம்.

இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.

'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று ஆளுநர் ஆர்.என்.இரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வந்து, இது போன்ற அபத்தங்களைப் பேசட்டும்.  அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட - அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

50 ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தர பிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது - தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா?

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்ததுதான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம்.  அதில் ஒருவராக ஆளுநர் இருப்பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது.

இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது?

'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.

இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக் கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.

தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி என பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.

சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது  திராவிடமல்ல; ஆரியம்.

எனவே, பிரிவினைக்கு எதிராகக் கண்ணீர் வடிக்கும் ஆர்.என்.இரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.

காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம். 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்துவிட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது.

அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் ஆளுநர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மைதான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா? அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணாசிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை.

தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக இரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்டவாறு திமுக பொருளாளர் டி‌.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment