Advertisment

பா.ஜ.க-வின் மோசடித்தனத்தைக் கண்டிக்க முதுகெலும்பு உண்டா?: இ.பி.எஸ்-க்கு டி.ஆர் பாலு காட்டமான பதிலடி

மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்று அம்பலப்பட்டுள்ள பா.ஜ.க பற்றி எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடாதது ஏன்? - டி.ஆர் பாலு

author-image
WebDesk
New Update
TR Balu
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் சட்டவிரோதம் எனக் கூறி ரத்து செய்தது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க உள்பட அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. 

Advertisment

இந்நிலையில்,  தி.மு.க பெற்ற நன்கொடைகள் குறித்து அ.தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் பியூச்சர் கேமிங் என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக தி.மு.க. பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

இதற்கு தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாக தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்து சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தார்.

சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. டிஜிபியே விசாரணையில் சிக்கினார். தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், `முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கோடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு `குற்றப்பட்டியல்' கொண்டவர் பழனிசாமி.

திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் திமுக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது திமுக அரசுதான்.

இப்போது தனது எஜமானர்களான பாஜகவை காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுகிறார். அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளன. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பா.ஜனதா' என்று அகில இந்திய அளவில் பா.ஜனதா அம்பலப்பட்டுள்ளது.

பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா?. `பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமி, பாஜகவின் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விடுவாரா?. பா.ஜனதாவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா..? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்கிறார் பழனிசாமி. அவர் கைக்குஅதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய் கொண்டுஇருக்கிறது. அ.தி.மு.க நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோல்வியடைந்துள்ளது" என்று விமர்சனம் செய்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami Balu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment