மேடவாக்கம் கூட்டுசாலை சந்திப்பு- சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஜூலை 2) முதல் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேடவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. சென்னையின் முக்கிய இடமாக உள்ளது. இந்நிலையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மேடவாக்கம் கூட்டுசாலை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலை, மெம்மொழி சாலை ஆகியவற்றில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தப் பகுதியில் சோதனை முறையில் ஜூலை 2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து மெம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பள்ளிக்கரணை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ திருப்பம் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ திருப்பம் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மேலும் மேடவாக்கம் சந்திப்பு பகுதியில் இருந்து மாம்பாக்கம் சாலை, வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“