Tamil Nadu Chennai Train Accident Updates: திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை மைசூரு - தர்பங்கா செல்லும் ‘பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்’ பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது.
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்’ ரயில் (12578), திருவள்ளூர் மாவட்டம், கவர்ப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து இரவு 7.30 மணி அளவில் புறப்பட்ட ‘பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்’ ரயில் 8.27 மணியளவில் கவரைப்பேட்டைக்கு வரவேண்டிய நிலையில், தாமதமாக 9.24 மணிக்கு வந்துள்ளது. அப்போது, தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்து நடைபெற்றதும் ரயிலில் பயணித்த பயணிகள் வெளியேறிய நிலையில், தீப்பிடித்த இரண்டு பெட்டிகளில் பயணித்த பயணிகள் வெளியேறி விட்டார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ரயில் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. மேலும், 5 பெட்டிகள் இந்த விபத்தில் தடம் புரண்டது. இதில் ஏசி பெட்டிகளும் தடம் புரண்டுள்ளன.
ரயில் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் விரைந்து சென்றுள்ளார். மேலும், மீட்பு பணிக்கு அருகிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், கவரப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றன.
அதே நேரத்தில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.