விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு, இன்று காலை விபத்துக்குள்ளானது என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். தடம் புரளும் பலத்த சத்தம் கேட்டதும் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து நடந்ததும் பயணிகள் அனைவரும் உடனடியாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த ரயில்வே பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
"பணியாளர்களின் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மற்ற ரயில்கள் பயணிப்பதற்கு வசதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதா அல்லது யாரேனும் விபத்து ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்பது குறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.