அரியலூர் அருகே நிகழ்ந்த எதிர்பாராத மண்சரிவு, விழுப்புரம் - அரியலூர் ரயில் வழித்தடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை விழுப்புரம் மார்க்கமாக அரியலூர் வழியாக திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், வெள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென நிறுத்தப்பட்டது. இதன் பின்னாலேயே வந்தே பாரத் ரயிலும் நடுவழியில் நிற்க நேர்ந்தது.
இந்த மண்சரிவு, வெள்ளூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்திற்கு கீழே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் மண்சரிவால் வந்தே பாரத் ரயில் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நடுவழியில் நிற்பதால், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு பயணிகளும் குடிநீர், உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் குழுவினர் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், மண் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் சீரமைக்கப்படுவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் நிலைமையை விரைந்து சீர் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தைப் போக்க மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.