கோவை- கஞ்சிக்கோடு இடையே ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. இதன் ஒருபகுதியாக கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட் அருகே ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது, இன்று (மே 7) அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற "சென்னை மெயில்" எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் காயமடைந்த பெண் யானை காயத்துடன் நகர முயன்றது.
ஆனால் நகர முடியாமல் அருகில் இருந்த குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலக்காடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்காடு வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் யானைக்கு 25 வயது இருக்கும் எனவும் ரயில் மோதி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடைய தற்போது உயிரிழந்த யானையை குழியிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் வனதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிற்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது.
இதுவரை கோவை மதுக்கரை- பாலக்காடு இடையே ரயில் மோதி 35-க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“