ரயில்வே துறையில் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு, தமிழகத்திற்குள் ஓடும் 10 ரயில்கள் உள்ளிட்ட 34 பயணிகள் ரயில்களை, எக்ஸ்பிரஸ் ரயில்களாக தரம் உயர்த்தும் நடவடிக்கை, மக்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரியம், அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் மண்டலங்களில் 200 கிமீ, தொலைவிற்கு மேல் ஓடும் ரயில்களின் நிறுத்த எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு குறைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி அதன் கட்டணத்தை உயர்த்த ஏதுவான ரயில்களின் பட்டியலை கேட்டுள்ளது.
விழுப்புரம் – திருப்பதி, ஈரோடு – திருநெல்வேலி, மயிலாடுதுறை – திருநெல்வேலக, திருச்சி – ராமேஸ்வரம், கோவை, கண்ணூர், கோவை – நாகர்கோவில், விழுப்புரம் – மதுரை, திருச்செந்தூர் – பாலக்காடு உள்ளிட்ட ரயில்கள், அப்பகுதி மக்களுக்கு குறைந்த கட்டணங்களில் இனிய ரயில் சேவையை வழங்கி வந்தது. இந்த ரயில்கள், விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
இதனால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு யாதெனில், அப்பகுதி மக்கள், இந்த ரயில் சேவையை பயன்படுத்த அதிக கட்டணம் தர வேண்டும் மற்றும் எல்லா நிறுத்தங்களிலும் இந்த ரயில் நிற்காமல், சில குறிப்பிட்ட நிறுத்தங்களிலேயே நின்று செல்லும் என்பதால், இந்த திட்டம் மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த ரயில்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக உள்ள நிலையில், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டால், இந்த கட்டணம் ரூ.30 ஆக உயரும்.
இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்காக ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, இந்த ரயில்களின் சேவைகளை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கட்டணமும் உயர்வு மற்றும் எல்லா நிறுத்தங்களிலும் நிற்காத நிலையால், அவர்கள் ரயில் சேவையை புறக்கணிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் பஸ்களில் செல்லலாம் என்றால், போதிய பஸ் வசதி இப்பகுதிகளில் இல்லாததால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்று ரயில் பயணியாளர்கள் சங்க முன்னாள் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
பயணிகள் ரயிலை, எக்ஸ்பிரஸ் ரயில்களாக தரம் உயர்த்துவது குறித்த முடிவு, சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற ரயில்வே வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Train services passenger train express train tamil nadu indian railways railway board chennai