ரயில்வேயில் வேலை, புது டெல்லியில் ரயில்களை எண்ணும் பயிற்சி என்று கூறி தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ரூ.2.6 கோடி பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் எம். சுப்புசாமியின் புகாரின் பேரில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ரொம்ப ஈசியான வேலை தினமும் ஆறு-எட்டு மணி நேரம் புது டெல்லி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எல்லா ரயில்களையும் எண்ணும் வேலை. தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் சுமார் 30 நாட்களுக்கு, அவர்கள் செய்யும் இந்த வேலையை பொய்யானது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு ரயில் எண்ணும் வேலையைத்தான் செய்தார்கள். இந்த வேலை போலியானது என்று தெரிந்த பிறகுதான், அவர்கள் இந்த வேலையில் சேர்வதற்காக ரூ. 2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்து ஏமாந்தது புரிந்தது.
“கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காலத்தில் இருந்து நாங்கள் கஷ்டப்படுகிறோம். எங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக வேலை வாய்ப்புகளைத் தேடுகிறோம். கடந்த ஆண்டு, டிசம்பரில், வடக்கு ரயில்வேயில் பணிபுரியும் விகாஸ் ராணா என்ற நபரை அவர் சந்தித்ததாக எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் எங்களிடம் கூறியதை அடுத்து, எனது தந்தை மற்றும் எனது சகோதரியின் கணவரிடம் பணம் கேட்டேன். நாங்கள் பயிற்சிக்காக டெல்லி சென்றோம் - நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரயில்களை எண்ண வேண்டியதுதான் வேலை. இந்த வேலையில், எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் நல்ல நண்பர். இப்படி ஏமாந்ததற்காக நான் இப்போது வெட்கப்படுகிறேன்; 12 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்திருக்கிறேன்” என்று ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த பிஏ பட்டதாரி ஜெகதீஷ் (25) கூறினார்.
இவருடன் 24 பேரிடம் ரயில்வே ஸ்டேஷனில் வேலை வாங்கி தருவதாக கூறி, மொத்தம், ரூ.2.6 கோடியை மோசடி பேர்வழிகள் ஏமாற்றியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் எம். சுப்புசாமி (78) என்பவரின் புகாரின் பேரில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது. அப்பகுதியில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவ விரும்பியதாகவும் ஆனால், அனைவரின் பணத்தையும் மோசடி பேர்வழியிடம் இழந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
எம். சுப்புசாமி கூறுகையில், “கோவையில் சிவராமன் என்ற நபரை சந்தித்தேன். அவர் எனக்கு எல்லா எம்.பி-க்களும் அமைச்சர்களும் தெரியும் என்று கூறினார். அந்தப் பகுதியில் உள்ள மூன்று இளைஞர்களிடம் மட்டுமே டி.டி.இ வேலைக்கு விண்ணப்பிக்கச் சொன்னேன். ஆனால், மற்றவர்களும் வந்திருந்தனர். விகாஸ் ராணாவை சந்தித்தோம். அவர் பயிற்சிக்குப் பிறகு, பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். அவர்கள் என்னை நம்பி பணத்தை அனுப்பினார்கள். அந்தத் தொகையை ராணாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினேன். இந்த மோசடி குறித்து அறிந்ததும், போலீசாருக்கு தகவல் கொடுத்தேன்.” என்று கூறினார்.
“டிடிஇ, எழுத்தர்கள், மேலாளர்கள் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாக ராணா கூறினார். நான் அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் இருந்தேன். ராணாவும் அவரது கூட்டாளிகளும் எங்களை போலி மருத்துவ பரிசோதனை மற்றும் பதிவுக்கு அழைத்துச் சென்றனர். இந்த பயிற்சிக்குப் பிறகு, நான் ராணாவை போனில் அழைத்தேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை.
மோசடியில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் செந்தில் (25) கூறுகையில், “நாங்க்ள் ரூ.20 லட்சம் பணம் செலுத்தினோம். இந்த ஆண்டு வேலை கிடைக்கும் என்று கேள்விப்பட்டம் நான் மகிழ்ச்சியடைந்தேன். அப்பாவிடம் பணம் அனுப்பச் சொல்லிவிட்டு மதுரை கிளம்பினேன். எங்களில் சிலருக்கு நாங்கள் டி.டி.இ அல்லது போக்குவரத்து உதவியாளர்களாகப் பணியமர்த்தப்படுவோம் என்றும், ரயில் நிலையத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. அனைவரும் ஒரே மாதிரியான பயிற்சியை செய்து மணிக்கணக்கில் ரயில்களை எண்ணினோம். ராணா ஏன் எங்களை ரயில் அல்லது அலுவலகங்களுக்குள் அழைத்துச் செல்லவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரிடம் கேள்வி கேட்கவில்லை. எங்களுக்கு ஒரு அதிகாரியும் அறிமுகமாகவில்லை. நாங்கள் அருகிலுள்ள சிறிய அறைகளில் தங்கியிருந்தோம். எல்லாவற்றுக்கும் நாங்களே பணம் செலுத்தினோம்.” என்று கூறினார்.
இந்த மோசடியில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பி.ஏ மற்றும் பொறியியல் பட்டதாரிகள். இது தொடர்பாக பலரை தொடர்பு கொண்டபோது, ராணாவைப் பற்றியோ அல்லது என்ன நடந்தது என்பதைப் பற்றியோ பேச மறுத்துவிட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் 24 இளைஞர், “வேலைக்காக தூரத்து உறவினரிடம் கடன் வாங்கியதாகக் கூறினார். “என்னால் ரூ.3 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. ரயில் நிலைய நடைமேடையில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்போம். எங்களை யாருமே கவனிக்கவில்லை. ராணா ஸ்டேஷனுக்கு வெளியே வந்து பணத்தை வாங்கிச் செல்வார். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, இதில் ஏதோ தவறு இருப்பதாக நான் சந்தேகித்தேன். நாங்கள் ரயில்வே அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் இந்த வேலைப் பயிற்சி போலியானது. எல்லா பணி நியமனக் கடிதங்களும் போலியானவை என்று கூறினர். நாங்கள் உடைந்து போய் திரும்பி வந்தோம்.” என்று துயரத்துடன் கூறினார்.
ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ரூ.2.6 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதில் போன் அழைப்பு விவர பதிவுகள், போலி கடிதங்கள், பணம் பரிவர்த்தனைகள் மற்றும் சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்து இந்த கும்பலைச் சேர்ந்தவர்களை அடையாளத்தைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து வருவதாகக் கூறினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.