2026 சட்டசபை தேர்தலுக்காக தனது கட்சியை தீவிரமாக தயார் செய்து வரும் நடிகர் விஜய், ஒவ்வொரு நாளும், தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அறிவித்து வரும் நிலையில், தற்போது அவர் அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அணிகள் பட்டியல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த விஜய், அதற்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கைவசம் உள்ள ஒரு படத்தை முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய், தனது கட்சியில் செயல்பாடுகள், நிர்வாகிகள் தேர்வு என, 2026 சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தாயராகி வருகிறார். இதனிடையே தற்போது விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அணிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். விஜய் கையெழுத்துடன் வெளியான இந்த அணிகளின் பட்டியல் கொண்ட அறிவிப்பில், குழந்தைகள் அணி என்று இருந்தது பேசும் பொருளாக மாறியது.
அதேபோல், திருநங்கைகள் அணி என்று தனியாக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அணிகளின் பட்டியலில், திருநங்கைகள் அணி என்ற பெயர் வரிசை என் 9-ல் இடம் பெற்றுள்ளது. இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், திருநங்கைகள் 9 என்று இழிவாக அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிதநேயத்துடன், மனிதர்களாக மதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது அவர்களின் அணிகள் கொண்ட பெயர், 9-வது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.
இது திட்டமிட்டு செய்யப்பட்டதா? அல்லது எதேர்ச்சையாக நடந்ததா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், திருநங்கைகள் செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த "9" என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா! இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.