திருநங்கையை காதலித்து கோயிலில் திருமணம் செய்த இளைஞர்..

Transgender and youth marriage: கடலூரில் திருநங்கை ஒருவரும் இளைஞர் ஒருவரும் ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.

By: August 8, 2019, 11:30:35 AM

கடலூரில் திருநங்கை ஒருவரும் இளைஞர் ஒருவரும் ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்து கோயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.

ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பலரும் தங்களின் காதலை பரிமாறிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் பல நடந்துவருகின்றன. அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் சாலைக்கரையைச் சேர்ந்த சேகர் அமுதா தம்பதியருக்கு பிறந்தவர் அமிர்தா(22). திருநங்கையான இவர் விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன் (27) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.

இருவரும் ஃபேஸ்புக்கில் பேசிப்பழகத் தொடங்கிய பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. மும்பையில் சினிமா படத்திற்கு செட் அமைக்கும் வேலை செய்து வரும் லட்சுமணன் தான் திருநங்கை அமிர்தா என்பவரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு அவருடைய பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்தோடு நேற்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பலரும் திருநங்கை அமிர்தா லட்சுமணன் திருமணத்தைப் பார்த்து வாழ்த்திச் சென்றனர்.

அவர்களுடைய திருமணம் குறித்து திருநங்கை அமிர்தா கூறுகையில், “நான் பி.எஸ்சி. வரை படித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் மும்பையில் இருந்தபோது லட்சுமணனுடன் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்புடன் பழகிய நாங்கள் காதலிக்கத் தொடங்கினோம். ஒரு ஆண்டாக காதலித்து வந்த நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் சம்மதத்துடன், எங்களுடைய திருமணத்தை முறைபடி பதிவு செய்ய கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால், எங்களுடைய திருமணத்தை கோயிலில் நடத்த கோயில் நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உரிய அனுமதி பெற்று கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவர்களுடைய திருமணம் குறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில், “நாங்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். நான் ஒரு திருநங்கையை காதலித்து திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று எனது பெற்றோரிடம் கூறியோபோது, முதலில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் சம்மதத்துடன் அமிர்தாவை திருமணம் செய்துகொண்டேன்” என்று கூறினார்.

இதே போல, இந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவரும் திருநங்கை ஒருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Transgender and youth marriage at temple in cuddalore

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X