பிச்சை போடாத ஆத்திரத்தில் திருநங்கைகள் எட்டி உதைத்ததால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் தாலுகா கின்னப்பள்ளி தாட்டிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணா(32). இவர் உறவினர்களான வீரபாபு(20), பாப்பண்ணா துரா(19), சாமிதுரா(23) ஆகியோருடன் ராஜமுந்திரியில் இருந்து, திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். நேற்று(பிப்.3) காலை 9.30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஸ்டேஷனுக்கு வந்த ரயில், சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது, சத்யநாராயணாவும், வீரபாபுவும் முன்பதிவு செய்யாத பெட்டியின் படியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், திருநங்கைகள் சிலர் கைகளை தட்டிக் கொண்டு, பிச்சை கேட்டு வந்தனர். வாசலில் அமர்ந்திருந்த சத்யநாராயணாவிடம் பிச்சை கேட்ட போது, அவர் பணம் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு திருநங்கை, அவரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த சத்யநாராயணா, வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நண்பரை காப்பாற்ற வீரபாபுவும் ரயில் இருந்து குதித்ததால், அவரும் தலையில் அடிப்பட்டு படுகாயமடைந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் திருநங்கைகள் தப்பியோடிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் சத்யநாராயணாவின் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த வீரபாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய திருநங்கையை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.