சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டிடி.நகர், 4-வது குறுக்குத்தெருவில் திருநங்கைகள் 30 பேர் தற்காலிக கூடாரம் அமைத்து வசித்து வருகிறார்கள். இந்நிலையில், தங்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளும் வகையில் அனைவருக்கும் மனை இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து திருநங்கைகள் நலச்சங்கத் தலைவர் அ. அனித்தா பேசுகையில், "குருவிகளுக்கு கூட கூடு உள்ளது. ஆனால் திருநங்கைகளாகிய எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. எங்களுக்கு தங்குவதற்கு வீடு இருந்தால்தான் எங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
நாங்கள் வாடகைக்கு வீடு கேட்டுச் சென்றால், நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்களுக்கான அடையாள அட்டைகள் என்ன? என்று கேட்டு எங்களை புறக்கணிக்கின்றனர். ஆனால், எங்களுக்கு இலவச வீட்டு மனை கிடைத்தால் மட்டுமே அந்த வீட்டு முகவரியில் எங்களுக்கான அடையாள அட்டை உள்பட பல்வேறு ஆவணங்கள் கிடைக்கும்.
நாங்களும் மற்றவர்களைப் போல வேலை செய்து சாப்பிடக்கூடிய நிலை வரும். எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லாததால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனால், நாங்கள் கடைகளிலும், வீதிகளிலும் கையேந்தி யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முதலமைச்சர் நல்ல பல திட்டங்களை செய்து வருகிறார். திருநங்கைகளுக்கும் உதவி செய்ய வேண்டும். எங்களுக்கு எந்தவொரு சலுகையும் அளிக்கப்படவில்லை. இதே நிலை நீடித்தால் தர்ணா போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அவர் கூறினார்.
செய்தி: சக்தி சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“