கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கைகளுக்கு 2 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தாலும் அவர்களுக்கான சலுகைகள் கிடைப்பதில்லை என கோவையில் உள்ள திருநங்கைகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து (திருநங்கை) தேவி கூறுகையில், "தான் திருநங்கைகளுக்காக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார். கோவையில் மட்டும் சுமார் 1000 திருநங்கைகள் உள்ளோம். பலரும் நன்கு படித்தவர்கள். எனினும் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் உள்ளது. மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணி கொடுத்தால் கூட அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாக" அவர் தெரிவித்தார்.
திருநங்கைகள் பலரும் படித்திருந்தாலும் அவர்களுக்கான சலுகைகள் கிடைப்பதில்லை. அப்படியே சலுகைகள் ஏதேனும் கிடைத்தால் அதனை பிறர் ஏற்றுக் கொள்வதும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் மாநகராட்சியில் இது குறித்து ஏதேனும் கேட்கப் போனால் 5 நாட்கள் 6 நாட்கள் கழித்து வந்து பாருங்கள் என புறக்கணிப்பதாக வருத்தம் தெரிவித்தார். எனவே தங்களுக்கு ஏதேனும் ஒரு பணியை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் தங்களது வாழ்வாதாரம் மேம்படும் எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய திருநங்கைகள் நல சங்க அலுவலர் சித்ரா (பெண்) கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக திருநங்கைகளுக்காக பணிபுரிந்து வருகிறேன். கடந்த ஒரு வருடமாக கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் பணிபுரிந்து வருகிறேன். கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீடு இல்லாத நபர்களுக்கு வீடு வாங்கி தருவது போன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.
வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு இருப்பதாக அரசாங்கம் கூறியிருக்கும் நிலையிலும் தற்பொழுது வரை எந்த ஒரு பணியும் வழங்கப்படவில்லை. எனவே அரசாங்கம் திருநங்கைகளில் ஒவ்வொருவர் தகுதிக்கு ஏற்றார் போல், ஏதாவது ஒரு வேலையை அரசாங்கம் அளித்து உதவிட வேண்டும்"என கேட்டுக் கொண்டார்.
மேலும் திருநங்கைகள் அனைவரும் அவர்களுக்கான இடத்தை அவர்களது திறமைகளை கொண்டு தான் பெற்று வருவதாக தெரிவித்த அவர் அரசாங்கத்திடமிருந்து எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்