திருநங்கைகள் அனைவரும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுகாதார நலன் உருவாக்கித் தரும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளது சகோதரன், தோழி மற்றும் ஐ.டி.ஐ குழுக்கள்.
தமிழகத்தில் உள்ள திருநங்கைகளின் திறமையை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும், வேலை வாய்ப்பு ஏர்படுத்தி அவர்களை பொதுச்சமூக நீரோட்டத்தில் இணையச் செய்யும் நோக்கத்தில் சகோதரன், தோழி மற்றும் ஐ.டி.ஐ ஆகிய தண்ணார்வ தொண்டு நிறுவனங்கள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
திருநங்கைகள் 3 நாள் விழா :
இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் விதமாக சென்னையில், 3 நாட்கள் விழா ஒன்றை நடத்தும் பணியில் களமிறங்கியுள்ளனர். வரும் 15ம் தேதி தொடங்கும் இந்த விழா 17ம் தேதி நிறைவடைகிறது. சென்னை கலைவாணர் அரங்கம், நுங்கம்பாக்கம் உட்பட 3 இடங்களில் இந்த விழா நடைபெற உள்ளது.
- 15ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் சரோஜா, கடம்பூர் ராஜூ மற்றும் நீதிபதி நாசர் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் நாளான அன்று திருநங்கைகளுக்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது.
- 16ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு குடும்பநல பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. 2ம் நாள் நிகழ்வில், திருநங்கைகளின் ஆரோக்கிய நலன், சிகிச்சை குறித்த ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் புகழ்பெற்ற மருத்துவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- 17ம் தேதியான நிறைவு நாளில், திருநங்கைகளின் நலன் கருதி பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல நடிகர்களும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ராகவா லாரன்ஸ் வருகை தர இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து பாலினத்தவர்களும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.