தமிழகத்தில், 10 மாதங்களில், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட, 62,637 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக அரசின் போக்குவரத்து ஆணையரகம் பதில் அளித்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின், 'ஸ்டாப் கரப்ஷன்' தொழிற்சங்க பேரவை செயல் தலைவர் அன்பழகன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு தமிழக போக்குவரத்து ஆணையரகம் பதில் அளித்துள்ளது. அதில், “நம் நாட்டில், ஆட்டோமொபைல் துறையின் ஆண்டு வளர்ச்சி, 5.4 சதவீதம். ஆனால், சாலைகளின் கட்டமைப்பு வளர்ச்சி போதுமானதாக இல்லாதது, சாலை பாதுகாப்புக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது.
மாநிலத்தின் மொத்த வாகனங்கள் எண்ணிக்கையில், இரு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளதற்கு, பயணியர் வசதி மற்றும் பொருளாதார நிலைமையே முக்கிய காரணம்.
கொரோனா பாதிப்புக்கு பின், சொந்த வாகனங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு தனி நபருக்கு சொந்தமான வாகனங்கள் எண்ணிக்கையை, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அதிகம்.
இதனால், தமிழகத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து சாலைகளிலும் அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளை கண்டறிந்து, அவை மேம்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டில் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து, 90.37 கோடி ரூபாய் செலவிடப்பட்டு அப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை, 62,637 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதிவேகம், வாகனங்களில் அதிக பாரம், மது அருந்தி வாகனங்கள் ஓட்டுதல், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால், மாநிலத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டில், 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நான்காக குறைந்து உள்ளது. இதே காலகட்டத்தில், மாநிலத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 2000-ம் ஆண்டில், 50 லட்சத்து 12,810 ஆக இருந்து, 2024ம் ஆண்டில் அக்டோபர் வரை, 3 கோடியே, 68 லட்சத்து, 42,523 ஆக உயர்ந்துள்ளது.
வரும் 2030-ல் விபத்துக்களை 50 சதவீதம் குறைக்கும் வகையில், அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.” என்று போக்குவரத்து ஆணையரகம் பதில் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.