அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பொங்கல் பண்டிகை நேரத்தில், வேலைநிறுத்தப் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் டிசம்பர் 27-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது, தனியார்மயத்தை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்பை போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு தொழிற்சங்கங்கள் அளித்திருந்தன.
அதில், வேலைநிறுத்தத்திற்கான காரணத்தை விளக்கி வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 2-ந்தேதிகளில் அனைத்து பஸ் நிலையங்களிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, ஜனவரி 4-ந்தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் ஆர்ப்பாட்ட வாயிற் கூட்டம் நடத்துவது, வேலை நிறுத்த தேதி மற்றும் போராட்டங்களை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இருந்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், டிசம்பர் 27-ம் தேதி கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“