/indian-express-tamil/media/media_files/lj5O5TrR5x7KjKqJFz8n.jpg)
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்; போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெறப்போவதில்லை என்றும், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பணியாற்றக்கூடிய, தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குரவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் வழங்கியிருந்தன. அதில், ஜனவரி 9-ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
போக்குவரத்துத் துறை ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டம், பொங்கல் பண்டிகைக்கு முன் நடைபெறும் என்பதால், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட லட்சக் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், வேலை நிறுத்தப்போராட்டத்தைக் கை விட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் கேட்டுக்கொண்டன.
இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும், பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தீர்வுகாணலாம் என்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெள்ளிக்கிழமை (05.01.2024) பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள்.
இதில், நிதி கூடுதலாக செலவாகும் சில விஷயங்களை நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும். இதனால், ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கிறோம். எனவே, நாளை மறுநாள் (07.01.2024) பேச்சுவார்த்தை நடைபெறும். அன்றைய தினம் முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன், “ஜனவரி 3-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் ஜனவரி 9-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்ததற்கு அமைச்சருக்கு நன்றி. பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இன்றைய பேச்சுவார்த்தையில், எங்களுடைய 6 கோரிக்கைகளை எடுத்துக் கூறினோம். அமைச்சர் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அதுவரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us