வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அதாவது, பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ, டாக்ஸி சேவை போன்று பைக் டாக்ஸிகளும் சமீப காலத்தில் கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக, ஆட்டோ அல்லது டாக்ஸியை பயன்படுத்துவதை விட, பைக் டாக்ஸிகள் அதிகளவு வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது.
குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது, பைக் டாக்ஸிகளின் பயன்பாட்டை அதிகரித்தது. ஏறத்தாழ ஆட்டோவுக்கு கொடுக்கப்படும் கட்டணத்தை விட பாதிக்கும் குறைவான அளவே பைக் டாக்ஸிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதால், பெருவாரியான மக்கள் இதனை அதிகமாக பயன்படுத்த தொடங்கினர்.
இதேபோல், சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் பைக் டாக்ஸி உதவியாக இருப்பதாக அதன் பயனாளிகள் கூறுகின்றனர். இவ்வாறு பல வகைகளில் பைக் டாக்ஸிகள் பயனுள்ளதாக இருக்கிறது என வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர்.
எனினும், பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இதனால், தங்கள் வாகனங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவும் குறைந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, பைக் டாக்ஸிகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் எனவும் நீண்ட நாள்களாக மற்ற வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், பைக் டாக்ஸிகளுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதன்படி, வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களான பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மண்டலம் வாரியாக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான அறிக்கையை தினமும் மாலை 7 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொந்த வாகனங்களை தொழில்முறையாக வாடகைக்கு பயன்படுத்துவது போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.