முன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்! பயணிகளுக்கு இழப்பீடு கோரி மனு!

முன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தின் போது நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு தர மனு

By: January 6, 2018, 6:34:03 PM

முன்னறிவிப்பின்றி போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்தின் போது நடுவழியில் இறக்கிவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த வியாழக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட போது பயணிகளை பல இடங்களில் நடுவழியில் இறக்கிவிட்டனர். இந்த செயலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கோரி வழக்கறிஞர் பிரீத்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் மனுவில், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், பயணிகள் பேருந்தில் இருந்த போது பாதி வழியில் பயணிகளை இறக்கிவிட்டது தவறு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக எந்த குரலையும் எழுப்பாமல், இப்போது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் முறையாக பயணச்சீட்டு பெற்ற பிறகும் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்காமல் நடுவழியில் இறக்கிவிட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயித்து, அதனை அரசு அளிக்க வேண்டும். மேலும் அந்த தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து பயணிகளுக்கு அளிக்க வேண்டும். அதே போல் மாதாந்திர பயணசீட்டு வைத்திருப்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பதிவுமூப்பு அடிப்படையில் உள்ள ஓட்டுநர், நடத்துனர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ்குமார் என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வேலைநிறுத்த சங்கங்களின் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே வராகி தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்குடன் இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகின்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Transport employees protest plea filed to give compensation for passengers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X