கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த 5-ந் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இன்று(ஜன.12) முதல் பணிக்கு திரும்ப போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று காலை முதல் வழக்கம் போல் ஓடத் துவங்கியுள்ளன. இதனால், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள் பெரும் மன உலைச்சலில் இருந்து மீண்டுள்ளனர்.
Government bus services restored after #TamilNadu Transporters Union withdrew their strike yesterday; #Visuals from Coimbatore pic.twitter.com/r4pr4c3w1G
— ANI (@ANI) 12 January 2018
ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.