ஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்கக் கோரி, நவம்பர் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர், ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலாண் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.