ஐந்தாவது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடருகிறது

By: January 8, 2018, 8:47:22 AM

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடருகிறது. பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 23 முறை நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.44 காரணி மடங்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தினர் 2.57 காரணி மடங்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தனர். இதையடுத்து முன் அறிவிப்பு இல்லாமல் கடந்த வியாழக்கிழமை மாலையில் இருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்தும், உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவை மதித்து, பொதுமக்கள், மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நீதிமன்ற உத்தரவு மற்றும் அமைச்சர் வேண்டுகோளை ஏற்க மறுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்து வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க பொதுமக்களின் போக்குவரத்து தேவையை சமாளிப்பதற்காக அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்குவதை விடவும் தமிழகம் முழுவதும் குறைவான அளவு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை ஏற்று எங்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்குவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஓடாத பேருந்துகளை ஓடியதாக காட்டி முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. பொதுமக்களின் நலன் கருதி பொறுமையுடன் உள்ளோம். போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்திற்கு தொழிலாளர்கள் காரணமல்ல. எங்கள் தரப்பு நியாயங்களை உயர் நீதிமன்றத்தில் நாளை முன் வைப்போம்’’ எனக் கூறினார்.

இந்த நிலையில், ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சில தனியார் பேருந்துகள் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதுபோன்று தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்தாவது நாளான இன்று, கன்னியாகுமரி – 30%, நாமக்கல் – 88%, திருவாரூர் – 70%, திருப்பூர் – 80%, சேலம் – 73%, புதுக்கோட்டை – 48%, ஈரோடு – 60%, தேனி – 52% அளவிற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Transport employees strike continues for fifth day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X