இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளாற்றில் ஏற்பட்ட மணல் குவாரி வழக்கு விசாரணைக்காக கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆஜர் ஆனார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது;
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு 20,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கூடுதலாக பேருந்து இயக்கியதால், பொதுமக்கள் நெருக்கடி இல்லாமல், பிற ஊர்களுக்குச் செல்ல முடிந்தது. அரசு பேருந்துகளில் இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்தனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பேர் கூடுதலாக முன்பதிவு செய்தனர். தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் அரசுப் பேருந்தை நோக்கி வருகின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. மற்ற பேருந்துகள் கிளாம்பாக்கம் சென்று தான் சென்னையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. பொங்கல் பண்டிகை காரணமாக சில பேருந்துகள் சென்னைக்குள் இயக்கப்படுகின்றன. இந்த வாரம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும்.
ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது உறுதி செய்யப்படும். கிளாம்பாக்கத்தில் உள்ள பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் உடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“