Transwoman Ganga: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வேலூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 49 வயதான திருநங்கை கங்கா 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
கொங்குவில் அ.தி.மு.க டோட்டல் டேமேஜ்: அசைன்மென்ட்-ஐ முடித்த செந்தில் பாலாஜி!
கடந்த 2002ம் ஆண்டு முதல் திமுகவில் உறுப்பினராக இருக்கும் கங்கா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினராக செயல்பட்டார். தற்போது 50 பேர் கொண்ட கலைக்குழு ஒன்றை நடத்தி வரும் அவர், தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலைகள் என அனைத்து உதவிகளையும் அவர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மேற்கொண்ட சமூக சேவை மக்கள் மத்தியில் கங்காவை பரீட்சயமாக்கியது. வாக்காளர்களை அணுக அதுவே அவருக்கு உதவியாகவும் இருந்துள்ளது. கங்கா இந்த தேர்தலில் 2131 வாக்குகளைப் பெற்றுள்ளார். வெறும் 15 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை வீழ்த்தி போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் அவர்.
இவர் வெற்றி பெற்றதை தெரிந்து கொண்ட சக திருநங்கைகள் இவரை கட்டித் தழுவி தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்த காட்சிகளும், புகைப்படங்களும் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை தேர்தலின் போது திருநங்கை வேட்பாளர்களை திமுக மட்டுமின்றி, அதிமுக மற்றும் பாஜக கட்சியினரும் களம் இறக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil