Scheduled tribes issue : தமிழக வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பட்டியல் பழங்குடி இனத்தவரை (ST) வனக்காவலர்களாக நியமனம் செய்திட நேர்முகத்தேர்வு முடிந்து ஒரு வருடம் ஆன நிலையிலும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு, வெகுஜன மக்களைக் காட்டிலும் காடு தொடர்பான அறிவு மிகவும் அதிகம். அதனால் தமிழக வனத்துறை அம்மக்களை பல்வேறு வனதொடர்பான வேலையில் ஈடுபடுத்தி வருகிறது.
ஆனால் தமிழக வனத்துறையில் பணியாற்றும் பெரும்பாலான பழங்குடியினர் தற்காலிக பணியாளர்களாகவே பொறுப்பு வகிக்கின்றனர். தற்போது கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வனச்சார்நிலைப் பணியான வேட்டைத்தடுப்பு காவலர்களாக மட்டும் 1119 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 30% பேர் பழங்குடி மக்களாக இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.இவர்கள் மூலம் வேட்டை தடுப்பு மற்றும் தீ தடுப்பினை அவர்களின் மூதாதையார் பாரம்பரிய வழிமுறைகளை கொண்டு மேற்கொள்வது மிகவும் எளிமையானதாக அமையும்.
இத்தகைய வனச்சார் நிலைப் பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பழங்குடிகளில் 15% பேரை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த பணியாளர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து சென்னைக்கு நேரில் அழைத்து நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் இந்த நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆன நிலையிலும் அவர்களுக்கு பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை.
இது தொடர்பான ஏக்தா பரிஷாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ்ஜிடம் பேசிய போது, இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக 112 பழங்குடி மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டால் நிலையான வருவாய் கிடைக்க உதவியாக இருக்கும். இது வரையில் மிகவும் சொற்பமான ஊதியத்திற்கு மிகவும் ஆபத்தான பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்” என்று கூறினார். மேலும்,“முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் பழங்குடியினர்களுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை முன்னெடுத்தார்கள். சட்டமன்றத்தில் முதன்முதலாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பள உதவித்தொகையை அதிகரித்து வழங்கியதோடு, பழங்குடிகளே காடுகளின் காவலர்களாகவும், ஆன்மாவாகவும் விளங்குகிறார்கள் என சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்”. அவரைப் போன்றே தற்போதும் பழங்குடி மக்களுக்கு இந்த அரசு உதவிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.