எ.பாலாஜி
இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கு ஒரே தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலங்களுடன் நதிநீரை பங்கீட்டுக்கொள்வதில் அதிக பிரச்னைகளை சந்திக்கும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தின் பெரும்பகுதி விவசாய பாசனத்திற்காக காவிரி நதிநீரையே நம்பி உள்ளது. தமிழக அரசு காவிரி நீரை ஆண்டுதோறும் நீதிமன்றம் சென்று போராடியே தனது பங்கை பெற வேண்டிய நிலை உள்ளது. காவிரி நதிநீர் பிரச்னையில் நதிநீரை பங்கீடு செய்வது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த மேலாண்மை ஆணையம் என்பது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகல் பல கட்ட சட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு அமைக்கப்பட்டது.
அதே போல, தமிழகம் கேரளாவிலிருந்து முல்லைப் பெரியாறு நீரை பெற்று வருகிறது. இதிலும் அணை மட்டத்தை உயர்த்துவது போன்றவற்றில் பிரச்னைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம் குடிநீருக்காக ஆந்திராவுடன் பாலாறு பிரச்னை உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு மத்திய அரசு இந்தியா முழுவதும் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளில் விரைந்து தீர்வு காண ஒரே அமைப்பு தேவை என்றும் அதற்காக ஒற்றைத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும் என்று கூறியது. இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் அண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மீண்டும் ஆட்சி அமைத்த மத்திய பாஜக அரசு, மக்களவையில், நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு ஒரே திர்ப்பாயம் என்ற சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள், இது தொடர்பான வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கின்றனர். என்பதைப் பார்ப்போம்.
இது குறித்து, தமிழக பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர் வீரப்பன் கூறுகையில், “தற்போது இருக்கிற முறைப்படி, இரண்டு அல்லது பல்வேறு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஆறுகளில் நதிநீரை பங்கீடு செய்வதற்கு மாநிலங்களின் ஒப்புதலோடு மத்திய அரசு, மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை 1956 சட்டப்படி ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. இந்த தனி திர்ப்பாயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நீதிபதி இருக்கிறார். அந்த நீதிபதிதான் தீர்ப்பாயத்தின் தலைவர். அவருக்கு கீழ் ஒரு வல்லுநர் குழு இருக்கிறது. அவர்களின் கீழ் ஒரு நிபுணர்கள் குழு இருக்கிறது. அவர்கள் இரண்டு மாநிலங்களிலும் அந்த நதி பாய்கிற இடங்களுக்கு சென்று பார்வையிட்டு விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரிடமும் கருத்து கேட்பார்கள். அது வல்லுநர்கள் குழுவுக்கு அனுப்பி வைக்கபடுகிறது. அதன் அடிப்படையில், அந்த வல்லுனர்கள் குழுவின் கருத்தின் அடிப்படையிலும், இரு மாநில அரசுகளின் வாதங்களின் அடிப்படையிலும் அந்தந்த மாநில பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையிலும் தீர்ப்பாயம் தீர்ப்பு அளிக்கிறது. இந்த முறையில் தீர்ப்பு வருவதற்கு 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அதற்கு காரணம் இந்த மாநிலங்கள் வாய்தாக்கள் கேட்டு காலம் கடத்துகின்றன. அதனால், மத்திய அரசு, இந்த தனித் தனி தீர்ப்பாயங்களுக்கு பதிலாக நாடும் முழுவதும் உள்ள நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்க சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் என்பது 10 அல்லது 5 பேர் டெல்லியில் இருந்துகொண்டு எல்லா மாநிலங்களின் பிரச்னைகளையும் மற்ற நீதிமன்றங்களைப் போல, இவர்களும் விசாரிப்பார்கள். இது சாத்தியமில்லை. ஏனென்றால், பலமொழி பேசுகிற, பல்வேறு வகையான நிலப்பரப்புகளைக் கொண்ட மாநிலங்கள் உள்ள நாட்டில், எல்லா மாநிலங்களும் எல்லா நதிகளும் ஒரே மாதிரியானவை இல்லை. அந்த மாநிலங்களின் பாரம்பரிய உரிமை பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது.
இதில் அவர்கள் முக்கியமாக என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த தீர்ப்பாயங்கள் நதி நீர் பிரச்னையில் தீர்ப்பளிக்க 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகின்றன. அதனால், இந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தின்படி, 2 ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என்று கூறுகின்றன. உண்மையில், இவர்கள் திருத்தம் செய்ய வேண்டுமானல் மிகவும் எளிது. ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு பதிலாக இந்த தனித்தனி தீர்ப்பாயங்கள் 2 ஆண்டுகளில் தீர்ப்பு அளிக்கம் வேண்டும் என்று கூறிவிட்டால் பிரச்னை முடிந்துவிட்டது. மேலும், இந்த தனித் தீர்ப்பாயங்களில் ஏற்பட்ட இதுவரையிலான காலதாமதத்துக்கு மத்திய அரசுதான் காரணமாக இருந்துள்ளது. தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளை மத்திய அரசு அரசிதழில் வெளியிடுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தன் மீது உள்ள தவறை திருத்திக்கொள்ளாமல் மத்திய அரசு, எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும், எல்லாமே ஒரு குடையின்கீழ் நடக்க வேண்டும் என்று நதிநீர் பிரச்னைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த் ஒரே தீர்ப்பாயத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. பல இனங்கள், பல மொழிகள், பல மாநிலங்கள், பல நதிகள் உள்ள நாட்டில் இது சாத்தியமில்லை. அப்படி, ஒரே தீர்ப்பாயம் கொண்டுவந்தால், காவிரி பிரச்னைகள் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும். இதனால், தேவையில்லாத குழப்பங்களும் புதிய பிரச்னைகளும் ஏற்படும். இதனால், தமிழகத்துக்கு பாதிப்புதான். அதனால், மத்திய அரசு ஏற்கெனவே தனித் தனி தீர்ப்பாயங்களை விரைந்து செயல்பட அதனுடைய பங்கை சீராக ஆற்றினாலே போதும்” என்று கூறினார்.
விவசாயிகள் தரப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கதின் தலைவரும்,காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கூறுகையில், “இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் விவகாரத்துக்கு முன்னோடி தேசிய தண்ணீர் கொள்கைதான். இந்த தேசிய தண்ணீர் கொள்கை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவர முயற்சி நடைபெற்றது. அதைத்தான் பாஜக அரசும் நிறைவேற்றியுள்ளது. இந்த தேசிய தண்ணீர் கொள்கை மறைமுகமாக நதிநீரை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது மத்திய அரசு மாநிலங்களின் நதிநீர் பிரச்னைக்கு ஒற்றைத் தீர்ப்பாயத்தை கொண்டுவர உள்ளன.
இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற கருத்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கலின் போது இந்த துறைக்கான அமைச்சர் உமாபாரதி நிதி விவகாரங்களில் தாக்கல் செய்தார். அப்போது நாங்கள் நடத்திய தொடர் போராட்டங்களால், தமிழகத்திலுள்ள திமுக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது பாஜக மீண்டும் அந்த சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவந்துள்ளது.
அதிகாரப் பகிர்வில் நதிகள் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு நதிகளை தனது அதிகாரத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம், தமிழகம் – கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நதிநீர் பிரச்னை முடிந்துபோன ஒன்று. அதற்காக அமைக்கப்பட்ட தனி தீர்ப்பாயம் காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தீர்வு கண்டிருக்கிறது. இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நிகரானது ஆகும். மேலும், இந்த தீர்ப்பாயங்களின் தீர்ப்பு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், மத்திய அரசு இதில் தலையிட புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனால், காவிரி நதிநீர் பிரச்னை முடிந்துபோகவில்லை பிரச்னையில் இருக்கிறது என்று கூறி ஒற்றைத் தீர்ப்பாயத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த பிரச்னை மீண்டும் முதலில் இருந்து தொடங்கும். இதனால், இப்போது காவிரி நீர் பெறுவதில் கிடைத்திருக்கும் தீர்ப்பு காலாவதியாகி தண்ணீர் பெறுவதில் பிரச்னை ஏற்படும். இப்படி, மத்திய அரசு தொடர்ந்து, தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. இந்த ஒற்றை தீர்ப்பாயத்தால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகள் பொதுமக்களிடையே கருத்துருவாக்க பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளோம். இதையடுத்து, விரைவில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து, இதனை எதிர்த்து என்ன மாதிரியான போராட்டங்களை நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
நதிநீர் பங்கீட்டு பிரச்னைக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான மசோதா குறித்து பாஜகவைச் சேர்ந்த, நாராயணன் திருப்பதி கூறுகையில், “பாஜக எந்த விஷயத்தைக் கொண்டுவந்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் இது போன்ற கருத்துகளை பரப்பிவருகிறார்கள். பாஜக ஆட்சியில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது என்பதை இவர்கள் உணர வேண்டும். காவிரி நதிநீர் பிரச்னை என்பது முடிந்துபோன ஒன்று. இப்போது, ஒற்றை தீர்ப்பாயம் மட்டும்தான் அமைக்கப்படுகிறது. இது மாநிலங்களில் நதிகளை இணைக்க வழிவகுக்கும். அதன் மூலம், பருவநிலை மாற்றத்தை நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும். பாஜக அரசு ரூ.905.78 கோடி நதிகளை தூய்மைப்படுத்த ஒதுக்கி இருக்கிறது என்பதை இவர்கள் உணர வேண்டும். அதனால், ஒற்றைத் தீர்ப்பாயம் மசோதாவை பாஜக கொண்டுவருகிறது என்பதற்காகவே இவர்கள் எதிர்ப்பது என்பது நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லதல்ல” என்று கூறினார்.
ஒற்றைத் தீர்ப்பாயத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுவது ஐயமாக இருந்தாலும், அதைப் போக்கி நம்பிக்கை அளித்து உறுதியளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் விவகாரத்தில் மத்திய அரசின் நகர்வை பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.