திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடி மெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில். இவர் திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிக்கு நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பிடிக்குமாம்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜான் ஸ்டேபி ஜாக்குலின் மெயில் வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதட்டம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் ஜுடிமெயில் தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து இறுதி சடங்கு செய்வதற்குரிய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில் இறப்பில் சந்தேகம் உள்ளது என அரியமங்கலம் போலீசாருக்கு மர்ம நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்ற பொழுது, ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயிலின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே எங்கள் பெண் இறந்து போய் உள்ளார் என்று நாங்களே வருத்தத்தில் உள்ளோம், தற்பொழுது எதற்காக நீங்கள் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய விரும்புகிறீர்கள் என ஆவேசப்பட்டதோடு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரேதத்தை கொடுக்க மறுத்து, எங்களை நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள் என அவரது உறவினர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் செய்வதறியாது விழித்த அரியமங்கலம் போலீசார் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சட்டரீதியாக பிரேதத்தை கைப்பற்ற முடிவு எடுத்தனர். பின்னர் அவர்களது உறவினர்களிடம் சுமூகமாக பேசி, எங்களுக்கு புகார் வந்துள்ளது, அதன் அடிப்படையில் நாங்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் கொடுக்க முடியும்.
மாலை 5 மணிக்குள் மருத்துவமனையில் கொண்டு சென்றால்தான் ஜான் ஸ்டேபி ஜாக்குலின் மெயிலின் உடலை உங்களுக்கு பிரேத பறிசோதனை செய்து கொடுக்க முடியும் என நேற்று போலீசார் கூறி அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் நம்மிடம் தெரிவிக்கையில்; ஜான் ஸ்டேபி ஜாக்குலின் நூடுல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அடிக்கடி நூடுல்ஸ் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவார், அந்த வகையில் தான் நேற்று இரவு சமைத்து சாப்பிட்டவர் நூடுல்ஸ்க்கு பிறகு குளிர்பானம் ஒன்றை வாங்கி அருந்தினார்.
அதன் பின்னர் அவர் படுக்கைக்கு சென்று விட்டார். வந்து பார்த்தபோதுதான் அவர் பிரேதமாக இருந்ததை அறிய முடிந்தது. பின்னர், எங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட போது தான் போலீசார் எங்களது பெண்ணின் உடலை பறித்து சென்றனர் என்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் சிலர் தெரிவிக்கையில், ஜான் ஸ்டேபி ஜாக்குலினை நேற்று இரவு பார்க்கும்போது நல்ல நிலையில் திடகாத்திரமாக இருந்தார். காலையில் அவர் இறந்து விட்டார் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜான் ஸ்டேபி ஜாக்குலின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதனால் இவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எங்களுக்கு உள்ளது எனத் தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.