விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஐ தொட்டது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மது குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் மெத்தனத்தாலும், போலீஸாரின் அலட்சியத்தாலும் இதுவரை 19 பேர் போலி மதுவினால் ஓரிரு நாட்களில் இறந்துள்ளனர் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதேநேரம் திருச்சியில் பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொள்ளிடம் ஆற்றில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சுமார் 1903 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 4 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு மாணவன் மட்டும் உயிரோடு திரும்பி வந்தான்.
திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான வேத பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் வக்கீல் கிஷோர்குமார் தெரிவிக்கையில், திருச்சி, ஸ்ரீரங்கம், கொள்ளிட கரையில் நேற்று முன்தினம் (மே 14) காலை குளிக்க சென்ற விஷ்ணுபிரசாத், ஹரிபிரசாத், அபிராம் என்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி மூன்று மாணவர்களும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சார்ந்த பத்ரிநாராயணன் என்பவரது வீட்டில் தங்கி குருகுல முறைப்படி வேதபாடம் கற்று வந்துள்ளார்கள்.
பலியான மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மோகன்ராம் தெரிவிக்கையில்; கள்ளசராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசும், தமிழக முதல்வரும் திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் எவ்வித அறிவிப்பும் இன்றி தண்ணீர் திறந்து விட்டதால், மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு பிரேதமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
திருவரம்பூர் கூட்டு குடிநீர் திட்ட வேலை தொடர்பாக இடையூறு ஏற்படும் என கருதி காவிரி நதியில் வர வேண்டிய நீரை கொள்ளிடத்துக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தற்காலிகமாக திருப்பி விடப்பட்டதில் வெள்ளம் பெருகி விபத்து நடந்துள்ளது.
யாத்ரீ நிவாஸ் அருகே நடந்த இந்த விபத்தில் முன் எச்சரிக்கைச் செய்தி பலகையோ, கொள்ளிடத்தில் நீரின் வேகம் அதிகறித்துள்ளது என்பது குறித்த ஒலி பதிவையோ ஏன் செய்யவில்லை?
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 பேர் கள்ளச் சாராயம் குடித்து இறந்து போயினர். இதில் மருத்துவ அவசர சிகிச்சைக்கு சிலர் புதுச்சேரி வரை எடுத்துச் செல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் உடனே 7 போலீஸ் இன்ஸ்பெக்டர், உதவி இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி உடனுக்குடன் செயல்பட்டனர்.
ஏழை மக்கள் டாஸ்மாக்கில் விற்கும் சரக்கினை வாங்க காசு இல்லாததால் மலிவு விலையில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் போலி சரக்கினை நாடுக்கின்றனர்.
இந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டதால் தானே களத்தில் இறங்கி பார்வையிட்டு நிவாரணத்தையும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைக்கு போகாமல் கள்ளத்தனமாக கிடைக்கும் சாராயத்தை குடித்து இறந்தால் நம் வீடாவது நன்றாக இருக்கும் என்ற நினைப்பில் பலரும் கள்ளச்சாராயத்தை தேடி அலையும் துர்பாக்கியத்தை அரசு ஏற்படுத்தியிருப்பது வேதனையளிக்கின்றது.
அதேநேரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கும் தமிழக அரசு, திருச்சி மாவட்ட அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் உயிரிழந்துள்ள வேத பாட சாலை மாணவர்கள் சம்பவத்தில் எந்த நிவாரணமும் அளிக்க முன்வராதது ஏன்?
இந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பொறுப்பேற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

அதேநேரம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்; இந்த விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் முதற்கட்ட தகவல் நேற்று முன்தினமே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் இதுகுறித்து விபரம் கேட்டறிந்தனர்.
இதனிடையே மாணவர்கள் ஒவ்வொருவரின் உடலும் நேற்று முன் தினம், நேற்று என மீட்க்கப்பட்டதால் அரசுக்கு முழு விபரத்தையும், 3 மாணவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மருத்துவமனையில் இருந்து கிடைக்கப்பெற்றதும் அதையும் சேர்த்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பப்படும். இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்றார்.
அதேநேரம், திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்தும் 3 மாணவர்கள் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவத்திற்கு எந்தவித இரங்கலையோ, நேரில் சந்தித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையோ சொல்லாதது சோதனையிலும் வேதனை என்கின்றனர் உள்ளூர்பிரமுகர்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“