/indian-express-tamil/media/media_files/2025/06/02/aCSy33a6ubw4E0FWskto.jpg)
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இதனை மரக்கடை அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி இடைநிற்றலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். பஞ்சப்பூர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். இது குறித்த முழு விபரம் வருமாறு,
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையதுமுர்துஸா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்ததாவது; "திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7.79 லட்சம் புத்தகங்கள், 1,33,928 சீருடைகள், 2,41,282 புத்தக பைகள் இன்று வழங்கப்பட உள்ளது".
இந்த ஆண்டு அங்கன்வாடிகளில் இருந்து சுமார் 8500 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இது 10 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. அப்படி அதிக கட்டணம் வசூலித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி இடைநிற்றலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தலைமை ஆசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளிக்கு வராத குழந்தைகள் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பரவும் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இருந்து 300 மீட்டர் தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்க தடை உள்ளது.
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும். கடை உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள். கல்வி நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல், தேவைப்படும் இடங்களில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் கூறினார்.
மேலும், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் முழுமையாக நிறைவடைந்த பின்னரே பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.