க. சண்முகவடிவேல்
Trichy | Tamil-nadu: தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் பகுதிகளில் தற்போது டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொசு மூலம் பரவும் உயிர்க் கொள்ளி நோயான டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகள் தடுக்கும் நடவடிக்கையாக, மாவட்ட பொதுசுகாதாரத்துறை, நகர்ப்புற பகுதிகளில் மட்டுமல்லாது, ஊரகப்பகுதிகளிலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 50 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வார்டில் 10 ஐ.சி.யு. படுக்கைகள், 20 படுக்கைகள் குழந்தைகளுக்காகவும், 20 படுக்கைகள் முதியோர்களுக்காகவும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் முழுவதும் கொசுவலைகள் கட்டப்பட்டுள்ளன. அத்துடன் தேவையான அளவு ப்ளேட்லெட் எனப்படும் ரத்த அணுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.
திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள டெங்கு வார்டில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என இன்று காலை டீன் நேரு மற்றும் திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முன்னதாக, திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கை வந்தடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு பொதுமருத்துவமனை டீன் நேரு தெரிவித்ததாவது:-
கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கண் தானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். கண் தானம் யார், யார் செய்யலாம், கண் தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கண்காட்சி மூலம் தெரிந்துக்கொள்ளலாம். ஒருவர் இறந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்தானம் செய்ய பொதுமக்கள் முன்வரவேண்டும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் டெங்குக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை. எனினும், சுமார் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் இருக்கின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது நீர்ச்சத்து குறைபாடு இருக்கும். இந்த நீர் சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான மருந்துகளும், டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்காக மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன.
பூந்தொட்டிகளை சரிவர பராமரிக்காதது, மாடிகளில் மழைநீர் தேங்குவது, நீர் உள்ள கண்டெய்னர்களை சரிவர மூடாமல் இருப்பது உள்ளிட்ட காரணிகளாலேயே, டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் தத்தம் சுற்றுப்புரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நிபா வைரஸ் தற்போது கேரளாவில் பரவுவதாக கூறப்பட்டாலும், தமிழகத்தில் குறிப்பாக திருச்சி உள்ளிட்ட சுற்று வட்டார அண்டை மாவட்டங்களில் நிபா வைரஸ்க்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.
இருப்பினும், அரசு பொதுமருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். அவ்வப்போது ஆங்காங்கே மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.