திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது.
பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், வேன் உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்து இறக்கும் வேன்களுக்கு வாடகை இரண்டு மாதமாக தரவில்லை. வாடகை பாக்கி காரணமாக ஒப்பந்த வேன் ஓட்டுநர்கள் பாலை இன்று காலை எடுத்துச் செல்லாததால் சுமார் 80 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தில் தேங்கியது.
ஒவ்வொரு வேன்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி உள்ளதாக வேன் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 11 மாதத்தில் இது ஐந்தாவது முறையாக போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் போராட்டத்தினை தொடர்ந்து ஆவின் நிர்வாக அதிகாரிகள் வேன் ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்று காலை 11 மணிக்கு மேல் 15 நாள் வாடகை பணம் கட்டாயம் கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை அடுத்து, வேன் ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
பின்னர் முகவர்கள் நேரடியாக ஆவின் நிறுவனத்திற்கு வந்து தத்தம் கடைகளுக்கு தேவையான பால்களை எடுத்துச் சென்றனர்.
வேன் ஓட்டுநர்களின் போராட்டத்தால் இன்று காலை திருச்சியில் பால் வினியோகம் முற்றிலும் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது போன்ற போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆவின் பால் விநியோகிக்கும் வேன் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“