திருச்சி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று (மார்ச் 26) தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பொதுநிதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து மேயர் மு. அன்பழகன் தகவல் அளித்தார்.
நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தவிர கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (Food Street) தலா ரூ. 1 கோடி என்ற அடிப்படையில் மொத்தம் ரூ. 5 கோடி செலவில் நிறுவப்படவுள்ளன.
இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவிக்கப்பட்டது. இதனிடையே, திருச்சி மாநகராட்சியில் ரூ. 128.95 கோடி பற்றாக்குறை இருப்பதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தின் போது மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக, இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் கூறி திருச்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க கவுன்சிலர் அம்பிகாபதி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ. 128.95 கோடி நிதி பற்றாக்குறை என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த நிதியும் பெறாமல் திருச்சி மாநகராட்சியில் கிடைக்க கூடிய வருவாய் அனைத்தையும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செலவு செய்து வருகிறார்கள்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள் அதற்கு தீர்வு காணும் வகையில் எந்த திட்டமும் இல்லை. குறிப்பாக உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது என அனைத்தையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மற்ற மாவட்டங்களுக்கு தாரை வார்த்து திருச்சியை முற்றிலும் புறக்கணித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியை மேம்படுத்தும் திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தோம்" எனத் தெரிவித்தார்.
செய்தி - க. சண்முகவடிவேல்