திருச்சி மாநகராட்சியின் 2025-2026ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டரங்கில் மேயர் மு.அன்பழகனிடம் நிதிக் குழு தலைவரும், மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம் இன்று தாக்கல் செய்தார். நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.
• நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன (Heritage Lamps) தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில், அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (Food Street) ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள், வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் மொத்தம் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
• விடுபட்ட அனைத்து தெருக்களுக்கும் தெருப்பெயர் பலகைகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• அனைத்து சாலைகளிலும் உள்ள சாலை மையத் தடுப்பு சுவர்கள், வேகத் தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படும் மற்றும் சாலை சந்திப்புகளில் ஒளிரும் சாலை ஸ்டட்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
• மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ள 20 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 40 வாட்ஸ் எல்.இ.டி மின்விளக்குகளாக மாற்றுவதற்கு ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கீழ்க்கண்ட பணிகள் நகர்ப்புற அமைச்சர் வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்
• பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.
குறிப்பாக 2025-2026ம் ஆண்டில் திருச்சி மாநகராட்சியில் ரூ128.95 கோடி பற்றாக்குறை இருப்பதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார். மேலும், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது அருகில் மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக, மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக்கூறி திருச்சி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசியதாவது;
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.128.95 கோடி நிதி பற்றாக்குறை என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த நிதியும் பெறாமல் திருச்சி மாநகராட்சியில் கிடைக்க கூடிய வருவாய் அனைத்தையும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு செலவு செய்து வருகிறார்கள்.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள் அதற்கு ஒரு தீர்வுகாணும் வகையில் எந்த திட்டமும் இல்லை.குறிப்பாக வளர்ந்துவரும் திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பது மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவருவது என அனைத்தையும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்ற மாவட்டங்களுக்கு தாரை வார்த்து திருச்சியை முற்றிலும் புறக்கணித்துள்ளார்.
இதுபோன்று மாநகராட்சியின் வளர்ச்சிக்கு எந்த முறையான திட்டம் குறித்து அறிவிப்பும் இல்லை. எனக்கூறி, மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்