க.சண்முகவடிவேல்
Trichy News in tamil: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னம் உள்ளிட்டவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதனை பொருட்படுத்தாமல், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை மறுநாள் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தில் நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவின் பெயர் கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதை கண்டித்தும், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில், திராளான அதிமுகவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இன்று புகார் மனு கொடுத்தனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்பி-க்கள் ரத்தினவேல், சிவபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டடோர் வந்தனர்.
அதிமுக ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட கழகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அதிமுக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிமுகவிற்கு தொடர்பு இல்லாத இவர்கள் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதை கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர், பொதுமக்களையும் அதிமுகவினரையும் குழப்பும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும், குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் செய்ய இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, அதிமுகவிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்திய தண்டனைச் சட்டம் 1860 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு ஆகியவற்றின்படி வழக்குப்பதிந்து இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருச்சி முன்னாள் எம்.பி.குமார் தெரிவிக்கையில்; அ.தி.மு.க., பொதுக்குழுவில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வமும், அவருடன் சேர்ந்தவர்களும் சட்டத்திற்குபுறம்பாக அதிமுக சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பன்னீர்செல்வத்தின் சமூக வலைதள பக்கத்திலும் ஒருங்கிணைப்பாளர் என்று உள்ளது. இது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. வரும் 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில், அதிமுக பெயர், சின்னம் மற்றும் கொடி போன்றவற்றை பயன்படுத்தும் உரிமை இல்லை. மீறி பயன்படுத்தினால், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள், சட்டத்தை மீறி பயன்படுத்தினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மூத்த நிர்வாகிகள் காவல்துறையினரிடம் மனு கொடுத்துள்ளோம்.
ஓ.பி.எஸ்., தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது. கடந்த ஜூலை மாதம் அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ்., கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடியாரை அங்கீகரித்திருக்கின்றது.
இந்தநிலையில், பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் கூட்டும் கூட்டத்தில் அதிமுக கொடியையும், கட்சியின் பெயரையும் ஒபிஎஸ் பயன்படுத்தக்கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்பதால் மாநகர காவல்துறை உடனே செயல்பட்டு ஜி-கார்னர் கூட்டத்தில் பயன்படுத்தப்படும் அதிமுக கொடிகளை அகற்றி, தடுத்து நிறுத்தவேண்டும் என்றார்.
அதேநேரம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டதும் போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தி முகப்பு வாயிலை மூடினர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்களில் சில இந்த புகார் கொடுத்த பின்பும் பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடிகளை பயன்படுத்தினானோ, அதை காவல்துறையினர் அகற்றவில்லை என்றாலோ, உண்மையான அதிமுகவினரே களமிறங்கி அங்கிருக்கும் கொடிகளை அகற்றுவோம் எனத் தெரிவித்ததால் ஓ.பி.எஸ் மாநாட்டில் கலவரம் நிகழுமோ என்ற ஐயம் திருச்சி வாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil