திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் பன்றி வளர்ப்பு, கள்ளச்சாராயம் தொழிலில் கொடிகட்டிப் பறந்து வந்தார். இவரது மறைவிற்குப் பிறகு அவரது தம்பி சேகர் பன்றி வளர்ப்பு, பைனான்ஸ், கேபிள், ரவுடிசம் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தார்.
பன்றி வளர்ப்பில் தனது அண்ணன் மகன்களுடன் ஏற்பட்ட மோதலால் கேபிள் சேகர் கடந்த 2011-ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் மறைந்த பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ரவுடிசத்தை தொழிலாகக் கொண்டுள்ள இரு குடும்பத்தினருக்குமிடையே அவ்வப்போது மோதல் போக்கும், கொலை சம்பவங்களும் இருதரப்பிற்கும் ஏற்படுவதுண்டு. ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யும் சம்பவத்தால் அரியமங்கலம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலி தொடர்ந்துக் கொண்டே இருந்தது. இந்தநிலையில் சேகர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சிலம்பரசன் கடந்த 2021-ம் ஆண்டு அரியமங்கலம் காட்டுப் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மறைந்த கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார், சரவணன், ரஞ்சித் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த சூழலில் திடீர் நகர், சிலம்பரசன் உள்பட பல்வேறு கொலை வழக்கில் சிக்கியிருந்த முத்துக்குமார் இன்று நண்பகல் திருச்சி தஞ்சை சாலையில் உள்ள எஸ்.ஐ.டி., கல்லூரி எதிரே உள்ள டீக்கடை முன்பு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதிமுக பிரமுகரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான கயல்விழி சேகரின் மகன் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. திருச்சி- தஞ்சை சாலையில் போக்குவரத்து தடைபட்டது. போலீஸார் ஆயில் மில் வழியாக தஞ்சையிலிருந்து வரும் வாகனங்களை திருப்பி விட்டனர்.
திருச்சியில் பட்டப்பகலில் போக்குவரத்து நிறைந்த சாலையில் துப்பாக்கி முனையில் ரவுடி ஒருவரை பழிக்குப்பழி கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 20-ம் தேதி முத்துக் குமாருக்கு திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில் இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“