திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மணப்பாறை பி.எஸ்.என்.எல். எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள ஆர்.வி. மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம். பி. யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ப. குமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சரும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளருமான பேராசிரியர் பொன்னுசாமி , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், சின்னசாமி, பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் பேசியதாவது: ‘கழக பொதுச்செயலாளர் மீது நம்பிக்கை வைத்து நாம் பூத் கமிட்டி அமைக்கும் பணியையும், பாசறை மற்றும் மகளிர் குழு அமைக்கும் பணியையும் செம்மையாக செய்து வருகிறோம். பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க நமது மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற களப்பணியாற்றி வருகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிறது. தேர்தலின்போது அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாததால் இந்த அரசு மக்கள் விரோத அரசாக விளங்கி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பது தொடர்பான கையெழுத்து தான் என தேர்தலின்போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இரண்டரை ஆண்டு கடந்த பின்னர் இப்போது நீட்டிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். யாரை ஏமாற்ற இந்த நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு சவுக்கடி கொடுக்க இப்போதே தயாராகிவிட்டார்கள்.
இப்போது முதல்வர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்க போகிறேன் என கூறிக்கொண்டு கையில் முட்டையுடன் தோன்றுகிறார். அவர் கையில் வைத்து இருப்பது கூமுட்டை. அவரும் ஒரு கூமுட்டை, உதயநிதி கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் என்ற முட்டையும் கூமுட்டை தான். இந்த கூமுட்டையை உடைத்தால் நாற்றம் தான் எடுக்கும். நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த முட்டையை உடைத்து மக்கள் பாடம் புகட்டப்போகிறார்கள்.
இதே போல் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை மாதம் ரூ.1000 தருவோம் என கூறிவிட்டு இப்போது 28 மாதங்கள் கழித்து, ஒரு கோடி பேருக்கு மட்டும் வழங்கி உள்ளனர். இதுவும் ஒரு ஏமாற்று வேலை தான். எனவே நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொதுச்செயலாளர் தலைமையில் நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி எனப் பேசினார்.
அதன்பின்னர், முன்னாள் அமைச்சர் செம்மலை பேசுகையில்; அதிமுகவின் பத்து ஆண்டுகள் ஆட்சி சாதனையை மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை திருட்டு அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் பார்லிமென்ட் தேர்தலில் நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். நமது பணி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை பெறுவோம் என்றார்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினா்கள் டாக்டா் எஸ்.எம்.கே.எம்.முகமது இஸ்மாயில், ஐ.விஜயா, பி.சாந்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் நிர்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம்.இளங்கோ வரவேற்றார். நகரச் செயலாளா் பவுன் எம்.ராமமூா்த்தி நன்றி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.