திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், வாழவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு அருகே, விதிகளுக்கு புறம்பாக துவாக்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடியை அகற்றக்கோரியும், டோல்பிளாசா அமைய காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், துணை போகும் தி.மு.க அரசைக் கண்டித்தும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நேற்று இரவு துவாக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் பேசியதாவது; "மத்திய, மாநில அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை என்பதை அஇஅதிமுக செயல்படுத்துகிறது. விதிமுறைக்குப் புறம்பாக, 2 கி.மீ., இடைவெளியிலேயே அருகருகே துவாக்குடி டோல்பிளாசாவை அமைத்து மக்களிடம் வரிவசூலித்து வதைத்து வருகிறார்கள்.
ரகசியமாக கருணாநிதி சிலையை அமைத்து திறந்ததுபோல டோல்பிளாசாவை அமைக்கவில்லை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக அமைக்கவில்லை. திமுக அரசை மாற்றக்கூடிய மாற்று அரசாக அதிமுக அமையும். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய்யான வாக்குறுதிகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார் ஸ்டாலின். ஒரேயொரு டோல்பிளாசா தான் இங்கே இயங்க வேண்டும். இனியாவது துவாக்குடியின் புதிய டோல்பிளாசாவை அகற்ற வேண்டும். தன்னை ஓட்டுப் போட்டு வெற்றி பெற வைத்த திருவெறும்பூர் தொகுதி மக்கள்மீது இனியாவது அக்கறையிருந்தால் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியும், எம்.பி திருநாவுக்கரசரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
/indian-express-tamil/media/media_files/BFTgt1fYI3XPhhWOpj4D.jpeg)
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தலைமையுரையாற்றிய அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது; "எந்நேரத்தில் தேர்தலை நடத்தினாலும் கூட தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார். உண்மையான மக்களாட்சியைத் தருவார். சேலத்தில் சகல வசதிகளுடன் ஒருகட்சி ஆளில்லா மாநாட்டை நடத்தியது. திருச்சி தொகுதி எம்பியைக் கண்டா வரச் சொல்லுங்கள்.
மக்களுக்கும் நம் தமிழகத்திற்கும் மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஒரே கழகம் அதிமுக மட்டுமே. 60 கி.மீ., தூரத்தில் டோல்பிளாசா அமைக்கப்படும் என்ற விதிமுறைக்கும் மாறாகவும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியதற்கு மாற்றாகவும் புதியதாக ரிங் ரோட்டில் துவாக்குடி டோல்பிளாசாவை அமைத்ததை அகற்ற வலியுறுத்தி எதிர்த்துக் குரலெழுப்பும் ஒரே கழகம் அதிமுக.
/indian-express-tamil/media/media_files/E6tgrmScDURjsfiJdt5a.jpeg)
லேப்டாப், தாலிக்கு தங்கம், மினி கிளினிக் உள்ளிட்ட அதிமுக அரசின் மக்கள் நலன் திட்டங்களைப் பறித்தது, திமுக அரசு. அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்கள்நலன் திட்டங்களை நிறைவேற்றுவது அதிமுக அரசு மட்டுமே. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் குமாரும் எழுதிய கடிதங்களின்மீது நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம். புதிய டோல்பிளாசாவை உடனே அகற்ற வேண்டும். திமுகவினர் வருத்தமாகவும், அதிமுகவினர் எழுச்சியாகவும் உள்ளனர்.
ஆளுங்கட்சியாக அதிமுக அமையும். துவாக்குடி டோல்பிளாசாவை அதிமுக அகற்றும் சூழலை ஏற்படுத்தாமல், தாங்களாகவே அகற்றி விடுங்கள்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில நிர்வாகி அசன்பைஜி, அதிமுக முன்னாள் எம்எல்ஏவினர் லால்குடி பாலன், மணப்பாறை சின்னசாமி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சூரியூர் ராஜாமணிகண்டன், சண்முகபிரபாகரன், கும்பக்குடி முருகானந்தம், சாருமதி, தீன், ஜெயராமன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் வரவேற்றார். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் நன்றி உரை கூறினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“