க.சண்முகவடிவேல்
Trichy | Lok Sabha Election 2024: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்சல் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ப.குமார் இன்று காலையில் வாக்களிக்க சென்றார்.
அப்போது, வாக்குச்சாவடி மையத்துக்குள் வரிசையில் நின்று அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வாக்குப்பதிவு மையம் அருகே வந்தனர். அந்த தருணத்தில் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவித்து வெளியேறுமாறு கூறினர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆவேசம் அடைந்த முன்னாள் எம்பி ப.குமார் தெரிவிக்கையில்:- "நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்.பி யாக இருந்திருக்கிறேன். வி.ஐ.பி-கள் வாக்களிக்கும்போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. வாக்குப் பதிவு மைய அலுவலர்கள் முறையாக நடைமுறைகளை தெரிந்து கொண்டு வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற வேண்டும். நான் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்க வருகிறேன் எனச் சொல்லி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அதே நேரம், அவருடன் வந்த அ.தி.மு.க பிரமுகர்கள், இன்று காலை மக்கள் மன்றத்தில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு வாக்களிப்பதை படம் எடுக்க அனுமதித்த தேர்தல் அலுவலர்கள் அ.தி.மு.க வி.ஐ.பி-களை படம் எடுக்க அனுமதிக்காதது ஏன் என தெரியவில்லை. தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வழங்கியது ஏன்? என தெரியவில்லை எனக் கூறியவாறு அவர்களும் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவுகிறது." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“