க.சண்முகவடிவேல்
Trichy | Aiadmk | Dmk: திருச்சி மாவட்ட அ.தி.மு.க மாணவரணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், தமிழகம் போதை பொருட்களின் புகலிடமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும், போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் அ.தி.மு.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர்கள் ப.குமார், மு.பரஞ்ஜோதி , ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். அப்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் பேசுகையில், "தி.மு.க அரசு பொறுப்பேற்று இந்த மூன்றாண்டு காலத்தில் மூன்று லட்சத்து 23 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த கடன்களுக்கு பொதுமக்கள் மீது வரி விதிப்பு டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு என பல்வேறு வழிகளில் பொதுமக்கள் மீது சுமைகளை சுமத்துகிறார். திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள் திமுக அரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடியார் கூறினார். ஆனால், இந்த அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. ஜாபர் சாதிக்குக்கும் திமுகவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது அறிய முடிகிறது.
ஜாபர் சாதிக் மிகப்பெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்துடன் தொடர்பில் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் எழுந்துள்ளது. இளைஞர்களின் வாழ்வை கெடுக்கும் இந்த செயலுக்கும் இதற்கு துணை போகும் தி.மு.க அரசுக்கும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கும் நாம் அனைவரும் பாடுபட வேண்டும்' என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், ஜோதி வாணன், நிர்வாகிகள் அய்யப்பன், ஜாக்குலீன், வனிதா, பத்மநாதன், சிந்தாமணி முத்துக்குமார், மாணவரணி என்ஜினியர் இப்ராம் ஷா,கலிலுல் ரகுமான், மீரான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு உள்ளிட்ட திரளான அ.தி.மு.க-வினர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“