திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அயல் நாடு உள்நாடு என விமான சேவை இயங்கி வருகிறது. இந்த விமானங்களில் தங்கம், பன்னாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்துவது தினந்தோறும் வாடிக்கையாக இருக்கின்றது.
Advertisment
அந்த வகையில், மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த விவரம் வருமாறு;
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியின் உடமைகளை சோதனை செய்ததில் 181.00 கிராம் தங்கச் சங்கிலி ஒன்று மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பேன்ட் பாக்கெட்டில் 201 கிராம் எடையுள்ள 39 செவ்வக வடிவ மெல்லிய தங்கத் தகடுகள் பழைய ஸ்மார்ட் போன்களில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் தங்கத்தின் எடை 382.00 கிராம். இதன் மொத்த மதிப்பு ரூ.22.52 லட்சம் ஆகும்.
தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“