திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார்.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சிக்கு வந்தார்.
இன்று காலை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் வழக்கு முடிந்து மதியம் ஒரு மணி அளவில் வெளியே வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து, மத்திய அரசு பிரச்சனை மற்றும் தமிழக அரசு பிரச்சனைகளை பேசினார்.
பின்னர், மாலை சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் வழக்கமான டிக்கெட் பரிசோதனைகளுக்குப் பிறகு சீமான் உள்ளே அனுப்பப்பட்டார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் மெட்டல் டிடெக்டர் சோதனையின்போது சைரன் ஒலி எழுப்பியது.
இதனை அடுத்து சீமானை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் சிறிய ரக கத்தி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமானத்தில் பயணிக்கும் போதும், விமான நிலையத்திற்குள்ளும் எந்தவித இரும்பிலான ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதியின் அடிப்படையில் அதை கைப்பற்றியவர்கள், அது மிகச் சிறிய கத்தி என்றதின் அடிப்படையில் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், சீமானை எச்சரித்து விமானத்தில் ஏற அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்