திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட அயல் நாடுகளில் இருந்தும், சென்னை, மும்பை உள்ளிட்ட உள்நாட்டில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்து செல்லும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்படியான சூழலில் நேற்றிரவு சுங்கத்துறையினரை பதற வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்களில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் சில பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இவற்றை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பல கட்ட பாதுகாப்பு: ரூ.50 லட்சம் மதிப்புடைய ரயில் என்ஜின் மூலப் பொருள் கடத்தல்; பொன்மலையில் நடந்தது என்ன?
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 3 பயணிகளை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் மறைத்து கடத்த இருந்த அமெரிக்க டாலர், துபாய் தினார், சவுதி ரியால் உள்ளிட்ட ரூ.37.93 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்துச் சென்று நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடலில் வயிற்றுப் பகுதியில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பயணியை மருத்துவ பரிசோதனைக்காக விமான நிலைய பகுதியில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிகாரிகளின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். இதனால் பதற்றமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் சாலை வரை விரட்டிச்சென்று பிடித்து பின்னர், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil