திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், திருச்சி விமான நிலைய முனையத்தில், தமிழ், இந்தி, ஆங்கிலத்துடன் சமஸ்கிருத மொழியிலும் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.
வழக்கமாக, விமான நிலையங்களில் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்படுவது வழக்கம். ஆனால் திருச்சி முனையத்தில், நான்காவது மொழியாக சமஸ்கிருதத்திலும் கல்வெட்டு வைத்திருப்பது விவாத பொருளாகி உள்ளது.
ஒன்றிய அரசு அவ்வப்போது இந்தி திணிப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஒன்றிய அரசு பின்வாங்கும். இந்த சூழலில் தற்போது சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பல மாநிலங்களில் தாய்மொழியை நசுக்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது.
திருச்சி விமான நிலைய புதிய கட்டட கல்வெட்டில் சமஸ்கிருதம் இடம் பெற்றது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், வங்கதேசத்தில் எரியும் தீயில் பிடுங்கியது மிச்சம் என்பதுபோல அண்ணாமலை பேசி வருகிறார் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“