/indian-express-tamil/media/media_files/c72uTBqKClF5kBIzMlLc.jpg)
Trichy Airport
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. இது 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.
இங்கு புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், புதிய முனையத்தில், முகப்பில் பார்ப்போர் கண்களை கவரும் வகையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மாதிரி, தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ‘கிரிஹா-4’ தர நிலை கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
இதையொட்டி, அங்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புதிய முனையத்தின் பணிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.