திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பிறகே வெளியே அனுப்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விமான நிலையத்தில் தங்கம் பெருமளவில் கடத்தப்பட்டு வருகிறது. மேலும், போதைப்பொருள் மற்றும் உயிரினங்கள் கூட கடத்தி வரப்பட்ட சம்பவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறின.
இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட பொருள் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது என்ன பொருள் என்று ஆராய்ந்த அதிகாரிகளுக்கு அதன் பெயரும், அதன் மதிப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு இப்படிப்பட்ட ஒரு பொருள் கேள்விப்படாத பொருள் என்கின்றனர்.
அந்த பயணி தனது உடைமையில் மறைத்து கடத்தி வந்தது ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விதவிதமான போதைப் பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா போன்ற இந்த ஹைட்ரோபோனிக் போதைப்பொருள் திருச்சிக்குள் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்