திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதே போன்று திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வெளிநாட்டு பணத்தாள்களை கடத்திச் செல்வதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்வதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது.
இதையும் படியுங்கள்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை
இந்தநிலையில், நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி இருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் மர்ம பொருளை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் அந்த உடமையை சோதனை செய்த போது அதில் சுமார் 5 ஆயிரம் எண்ணிக்கையில் நட்சத்திர ஆமை இருந்தது. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 3 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆமை குஞ்சுகளை மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமையின் மதிப்பு மற்றும் அதனை கையாளும் விதம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆமை குறித்த அறிக்கை விரைவில் சுங்கத்துறை மற்றும் வனத்துறையினரின் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு ஆமை கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil