தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கோடை மழை வெளுத்து வாங்கியது. திருச்சியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையம் பகுதியில் 129.4 மி.மீ மழை பெய்தது. திருச்சி மாவட்டத்திலேயே நேற்று அதிகமாக விமான நிலையப் பகுதியில் மட்டுமே மழை பெய்துள்ளது. இதனால் விமான நிலையம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது. குறிப்பாக விமான நிலைய ஓடுதளம் மற்றும் தீயணைப்பு நிலையம் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே தேங்கிய மழை நீர் கடல் போல் காட்சியளித்தது.
குறிப்பாக இந்த மழையால் விமானங்கள் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் செல்வதற்கும் எந்த சிரமமும் ஏற்படாத வண்ணம் விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இனிமேல் மழைநீர் தேங்காமல் இருக்க தற்பொழுது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணி தெரிவித்தபோது விமான போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. மழைநீர் உடனே வடிந்து விட்டது. தீயணைப்பு நிலைய பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிகபட்ச மழையளவு திருச்சி விமான நிலையத்தில் பெய்தது என்றார்.
முன்னதாக, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“