நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலையும் ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக அமைப்புகள், மகளிர் அமைப்பினர் பல்வேறு கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/fb730bfb-562.jpg)
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் முக்காடு அணிந்து அதனை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பாலபாரதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பகுதி செயலாளர்கள் தர்மா, விஜயேந்திரன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் சார்லஸ், மாவட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ், சங்க நிர்வாகிகள் ராகிலா , நவநீதகிருஷ்ணன், ஹாஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.